Powered By Blogger

Thursday, June 2, 2011

HERO HONDA - SPLENDER








SPLENDER - உச்சரிக்கும் போதே ஒவ்வொரு இளையதலைமுறை பைக் பிரியர்களுக்கு இது ஒரு மாயஜால வார்த்தை. ஆம் கடந்த ஏழு ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே இருக்கும் ஒரு வாகனம் இல்லை இல்லை இரண்டு வாகனங்கள்.. எங்கள் தந்தையின் பழைய லாம்ப்ரேட்டா ஸ்கூட்டர் தான் நானும் என் தம்பியும் ஆசைதீர பார்த்த முதல் இருசக்கர வாகனம் அப்போது முதல் இருசக்கர வாகனத்தின் மீது தீரா காதல்.படித்து முடித்து வேலைக்கு செல்லும் பொது இது போன்று இருசக்கர வாகனத்தை சொந்தமாகி கொள்ள வேண்டும் என எங்கள் மனதில் ஒரு ஆசை.



அதே போல் வேலைக்கு சென்றவுடன் வாங்கிய முதல் வாகனம் தான் இந்த SPLENDER - இன்று கார் வாங்கும் அளவிற்கு உயர்ந்து இருந்தாலும் மனம் என்னவோ முதன் முதலில் வாங்கிய வாகனத்தின் மீதே செல்கிறது. என் தம்பியின் நிலையும அதே தான். இன்று அவன் அமெரிக்காவில் நல்ல பணியில் இருந்த போதும் அவன் இன்னும் அவனுடைய பழைய வாகனத்தை விற்கவில்லை

முதன் முறையாக நான் இந்த பைக்கைப் பார்த்தது 1998 ஆம் ஆண்டின் ஒரு மே மாத காலைப்பொழுது. எங்கள் பள்ளி தேசிய மாணவர் படையின் முகாம். காலையில் உடற்பயிற்சி முடிந்து சப்பாத்தி ரேஷனுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோதுதான் பார்த்தேன்.. ஒரு ராணுவ வீரர் ஓட்டிக்கொண்டு வந்தார். சாம்பல் நிறம். அப்போது எனக்குத் தெரியவில்லை.. இந்த பைக்தான் இந்திய இரு சக்கர வாகனச் சந்தையை எதிர்காலத்தில் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்யப்போகிற வாகனம் என்று.! இதுவரை இந்தியாவில் விற்கப்பட்ட ஸ்ப்ளென்டர்களின் எண்ணிக்கை 110 லட்சத்துக்கும் மேல். தற்போதைய உற்பத்தி ஒரு நாளைக்கு ஆறாயிரத்துக்கும் மேல். ஒரு நிமிடத்துக்கு நான்கு ஸ்ப்ளென்டர் பைக்குகள் வாங்கப்படுகின்றன. வட இந்தியாவில் ஸ்கூட்டர் என்றால் பஜாஜ் என்பது போல் பைக் என்றால் ஸ்ப்ளென்டர் மட்டுமே. ‘சாய்ச்சிரோ ஹோண்டா' என்ற எஞ்சினியர் 1969 ஆம் ஆண்டு உருவாக்கிய ஒரு 97.2 சிசி எஞ்சின் இப்படியோர் சாதனை படைத்தது எப்படி? சுருக்கமாகப் பார்ப்போம். 1980 முதல் 1990 வரையான பத்தாண்டுகள் இந்திய இருசக்கர வாகனத்துறையின் பொற்காலம். அப்போதுதான் ஜப்பான் நாட்டின் மூன்று பெரும் இருசக்கர வாகன நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் நுழைந்தன. சுஸுகி , ஹோண்டா, மற்றும் கவஸாகி. அப்போதைய ‘லைசென்ஸ் ராஜ்' இந்திய அரசின் விதிமுறைப்படி எந்த வெளிநாட்டு நிறுவனமும் நம் நாட்டில் தனியாகத் தொழில் தொடங்க இயலாது. மூன்றுமே தொழில்நுட்பக்கூட்டுறவு முறையில் இந்திய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைத்தன, கீழ்க்கண்டவாறு.. டி.வி.எஸ் + சுஸுகி,ஹீரோ + ஹோண்டா, பஜாஜ் + கவஸாகிஇவற்றைத்தவிர ஒரு அட்டகாசமான நிறுவனமும் இந்தியாவில் காலெடுத்து வைத்தது. இன்றுவரை இந்திய இளைஞர்களின் இதயத்தில் அதற்கெனத் தனியிடம் உண்டு. அந்த நிறுவனம் - யமஹா. அந்தக் கதையைப் பிறகு பார்ப்போம். அப்போது இருந்த சந்தை நிலவரம் மற்றும் எரிபொருள் விலை இவற்றுக்குத்தக்க 100 சி சி பைக்குகளை இந்த மூன்று கூட்டு நிறுவனங்களுமே சந்தையில் இறக்கின. அப்போது சந்தையில் இருந்த மூன்றே பைக்குகளுக்கு (எஸ்டி, புல்லட், ராஜ்தூத்) சரியான மாற்றாக அமைந்தன அவை. - Ind Suzuki AX 100- Hero Honda CD 100- Kawasaki Bajaj RTZஇவற்றின் குறைந்த எடை, சிறந்த பிக்-அப், சுலபமான பராமரிப்பு, நல்ல எரிபொருள் சிக்கனம் ஆகிய அம்சங்களால் மூன்று மாடல்களும் சிறப்பாக விற்கத்தொடங்கினாலும், ஹீரோ ஹோண்டா மார்கெட்டில் முந்த ஆரம்பித்தது, அப்போது நிலவிய கீழ்க்கண்ட சில காரணங்களால்.பஜாஜ் ஒரு ஸ்கூட்டர் தயாரிப்பாளராகவே சந்தையில் அடையாளம் காணப்பட்டது. 1960-70 களில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடனே வரதட்சணைக்காக ஒரு பஜாஜ் ஸ்கூட்டர் புக் செய்வார்களாம்..அப்போதுதான் அந்த ஸ்கூட்டர் அப்பெண் குழந்தையின் கல்யாணத்துக்கு டெலிவரி வந்து சேருமாம். ஆம் நண்பர்களே.. காத்திருப்புக்காலம் ஆண்டுகளாக நீண்ட காலம் அப்போது.! (எனக்கென்னமோ இந்த காத்திருப்பு எரிச்சலுக்கு உள்ளான வாடிக்கையாளர்களே பின்னர் பஜாஜை பழி வாங்கக் கிடைத்த சந்தர்ப்பமாகவே வேறு கம்பெனிகளின் புது பைக்குகளை அமோகமாக வரவேற்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது) எனவே பஜாஜின் ஸ்கூட்டர்களுக்கு இருந்த மவுசு பைக்குக்கு இல்லை. இத்தனைக்கும் அப்போதே Concealed Carburettor, Tachometer, Central Locking போன்ற அட்டகாசமான அம்சங்களைக்கொண்டிருந்தது பஜாஜின் RTZ.டிவிஎஸ், அருமையான, எளிமையான தொழில்நுட்பம் கொண்ட பைக்குகளைக் கொண்டிருந்தபோதும் அது ஒரு தென்னாட்டு நிறுவனமாகவே பார்க்கப்பட்டது.. (டிவிஎஸ் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைந்துள்ளது, சமீபத்தில்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹிமாச்சல் பிரதேஷில் ஒரு பெரும் உற்பத்திப்பிரிவு துவக்கப்பட்டது). தவிர வட இத்திய பைக் நிறுவனங்களின் அரசியல், Lobbying, மற்றும் வட இந்தியாவில் அப்போதைய குறைந்த டீலர் நெட்வொர்க் போன்ற காரணங்களால் தென்னிந்தியாவைத்தாண்டி TVS நிறுவனத்தின் பெயர் தெரியவே இல்லை, 1998 வரை. அதற்குப் பின் TVS ஒரு அருமையான காரியம் செய்தது.. ஆனால் அதற்குள் ஹீரோ ஹோண்டா என்ற ஆலமரம் இந்தியா முழுவதும் விழுதுகளை இறக்கி விட்டிருந்தது, அதுவும் வெகு ஆழமாக.! Fill it, Shut it, Forget it - நினைவிருக்கிறதா? இதுதான் ஹீரோ ஹோண்டாவின் ஆரம்ப கால விளம்பர பன்ச்! அது உண்மையும் கூட. இது வரை இந்த நிறுவனத்தின் 85% விற்பனை 100 CC பைக்குகள் மூலமாக மட்டுமே பங்களிக்கப்படுகிறது. அத்தனை 100 CC பைக்குகளுக்கும் ஒரே எஞ்சின். ஆம், முதலில் சொன்ன அதே 97.2 சிசி எஞ்சின்தான். 1997 - 1998 ஆண்டுகளில் பெட்ரோல் விலை உயரத்தொடங்கியிருந்தது. மக்கள் எரிபொருள் சிக்கனத்தின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்த தருணம். அப்போது ஹீரோ ஹோண்டா மாடல்கள் மைலேஜுக்கான மதிப்பைப் பெற்றிருந்தன. ஆனால்.. டிவிஎஸ் சுசுகி, சமுராய் போன்ற Executive Bike ஹீரோ ஹோண்டாவிடம் இல்லை. போரடிக்கும் அதே CD 100, CD 100SS போன்ற மாடல்கள். நம்பிக்கையான, ஆனால் வனில்லா ஐஸ்க்ரீம் போன்ற மாடல்கள். மக்களுக்கு பிஸ்தா, ப்ளாக் கரண்ட் என வெரைட்டி தேவைப்பட்டது.. வாங்கவும் செய்தார்கள்.ஹீரோ ஹோண்டாவின் கள ஆய்வுக்குப் பின்னர் ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளென்டர் சந்தையில் இறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வண்டி காலி என்றுதான் நினைத்தார்கள். காரணம், அது போன்ற எந்த பைக்கையுமே சந்தை அதுவரை பார்த்ததில்லை. முன் விளக்கின் மேல் பிளாஸ்டிக் கவசம்(Fairing), சீட்டின் கீழே ஒரு ABS பிளாஸ்டிக் பாகம் (Tail Cover), பராமரிப்பு சாதனங்களிப்பூட்டி வைத்துக்கொள்ள பெட்ரோல் டேங்கின் கீழே ஒரு கச்சிதமான பிளாஸ்டிக் பெட்டி. அதில் சாய்வான UTILITY BOX என்ற அடையாளம் வேறு. முதல் மூன்று மாதங்கள் பெரிதாக விற்பனை ஆகவில்லை, காரணம் விலை கொஞ்சம் அதிகம்! பிறவற்றைவிட சுமார் மூவாயிரம் ரூபாய் அதிகம். ஆனால் பின்னர் நடந்ததெல்லாம் சரித்திரம். இன்று வரை உலகின் எல்லா பைக் நிறுவனங்களும் பொறாமைப்படும் சரித்திரம் அது.!மார்க்கெட்டிங் ஷோக்கள், எக்ஸ்சேஞ்கள், ஃஜீரோ பைனான்ஸ் எல்லா முயற்சிகளும் கையாளப்பட்டன. ‘ஸ்ப்ளென்டர்' என்றால் புது யுக இளைஞனின் பைக் என்ற பிம்பம் உருவானது. மார்கெட்டிங் ஜாலம் வேலை செய்ய ஆரம்பித்தது. ஆனால் உண்மையான காரணம் வேறு.. பைக்கை வாங்கிய மக்கள் பரப்பிய வாய்வழி விளம்பரம்.! அவர்கள் பெற்ற திருப்தி.! அதுதான் விஷயம்.. ஸ்ப்ளென்டர் பெற்றிருந்த சிறப்பம்சங்கள்:புதிய ஃப்ரெஷ்ஷான ஸ்டைலிங், மிக நம்பிக்கையான எஞ்சின்,அருமையான சஸ்பென்ஷன், சீரான எரிபொருள் சிக்கனம்,மிகக்குறைந்த பராமரிப்பு செலவு,தேவையான அளவு பிக் அப்,சிறப்பான ஹேண்ட்லிங்.இதனால்தான் ஸ்ப்ளென்டர் இன்றும் விற்கிறது. அதன் பின் எத்தனையோ போட்டித் தயாரிப்புகள் களமிறக்கப்பட்டன. ஆனால் ஒன்று கூட இது வரை அந்த இடத்தைப்பிடிக்க முடியவில்லை. எளிமையான காரணம்தான். பெயர்! நம்பிக்கை!! தரம்!! அவ்வளவுதான். ஒரு கட்டத்தில் ஹீரோ ஹோண்டாவாலேயே ஸ்ப்ளென்டர் என்ற பெயரை விட முடியவில்லை. அதன் 125CC போன்ற அடுத்தடுத்த பைக் மாடல்களுக்கு ஸ்ப்ளெண்டர்+, சூப்பர் ஸ்ப்ளென்டர், ஸ்ப்ளென்டர் NXG என்றும் பெயர் வைக்குமளவு சந்தை மதிப்பு இந்தப் பெயருக்கு. ஒரு நாளைக்கு பதினாறாயிரம் பைக்குகள். இந்தியாவில் ஹீரோ ஹோண்டாவின் மார்க்கெட் ஷேர் இன்று 45%. விற்றுமுதல் 1,27,000 கோடிகளுக்கும் மேல். மூன்று பரந்து விரிந்த தொழிற்சாலைகள். நான்காவது உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. கடைசியாய் ஒரே ஒரு விஷயம்.. 2015 ஆம் ஆண்டு முதலாக ஸ்ப்ளென்டர் பைக்கில் ஹோண்டா பெயர் இருக்காது! ஹீரோ குழுமத்தின் தாதா முஞ்சால் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. உங்களோடு நானும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

3 comments:

  1. Wonderful writing.. lots of information in very professional writing style.. I remember the other bikes we touched in our child hood.. mofa, luna & shogan. expecting more to come...

    ReplyDelete
  2. YENAKKUM FAVORITE SIR, BUT VAANKAMUDILA SITUATION SIR,

    ReplyDelete