ஊர் சுற்றித் திரும்பினோம். வழியில் ஒரு பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்கினோம்.
எனக்கு இரண்டு மகன்கள் : நிக் மற்றும் ஷான்க் இருவருக்கும் பிடித்த சாப்பாட்டுப் பண்டம், அடுத்தவர் கையில் இருப்பது. பிடித்த உடை, அடுத்தவர் அணிந்திருப்பது. ஆகவே எதை வாங்கினாலும் அச்சு அசல் ஒரேமாதிரியாக இரண்டு வாங்கிவிடுவேன். மனிதனால் சாத்தியமாகக்கூடிய அதிகபட்ச டெசிபல் * 2 சத்தத்தில் சண்டை ஒன்றைக் கேட்பதைவிட, கொஞ்சம் கூடுதலாகச் செலவழித்துவிடுவது உத்தமம்.
ஆக, இந்தக் கடையில் நான் ரெண்டு பாக்கெட் சிப்ஸ் வாங்கி ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தேன். ரெண்டும் ஒரே கலர், ஒரே எடை, ஒரே சுவை, பாக்கெட் ஓரத்தில் பிசிறு தட்டியிருந்ததுகூட ஒரேமாதிரி இருந்தது. எந்தவிதத்திலும் அவர்கள் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது. நிம்மதி!
நிக் தனக்குக் கிடைத்த சிப்ஸ் பாக்கெட்டை உடனே பிரித்துச் சாப்பிட ஆரம்பித்துவிட்டான். ஷான்க் அதைக் கையில் வைத்து அழகு பார்த்துக்கொண்டிருந்தான்.
திடீர்என்று நிக் கையில் ஏதோ சிக்கியது. ‘2’ என்ற எண்ணுக்குக் கண், காது, மூக்கு, கை, கால் வரைந்த ஒரு டாட்டூ.
அதைப் பார்த்ததும் நிக் குஷியாகிவிட்டான். ‘நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கறதால எனக்கு ‘2’ வந்திருக்கு’ என்றான்.
‘நோ சான்ஸ்’ என்றேன் நான். ‘இது ஏதோ ரேண்டமா வர்றது.’
‘இல்லவே இல்லை. இதெல்லாம் லக்கி(?) டாட்டூ, நாம என்ன க்ளாஸ் படிக்கறோம்-ன்னு தெரிஞ்சுகிட்டுக் கரெக்டா வருமாம், என் ஃப்ரெண்ட் ஆரவ்வ் சொல்லியிருக்கான்
எனக்குச் சிரிப்புதான் வந்தது. கூடவே, அவன் நினைப்பது தவறு, நான் சொன்னதுதான் கரெக்ட்’ என்று நிரூபிக்கிற ஈகோவும். ஷான்க் கையில் பிரிக்கப்படாமல் இருந்த சிப்ஸ் பாக்கெட்டைப் பார்த்தேன். ஒரு நல்ல ஐடியா கிடைத்தது.
‘ஒருவேளை நீ சொல்றது உண்மை-ன்னா, இப்ப ஷான்க் பாக்கெட்ல என்ன டாட்டூ இருக்கும்?’ என்று கேட்டேன்.
நிக் சில விநாடிகள் யோசித்துவிட்டு. ‘எல்.கே.ஜி. டாட்டூ’ என்றான்.
அந்த விநாடியில், என் ‘வெற்றி’ உறுதியாகிவிட்டது. ரெண்டாம் நம்பரைக் கார்ட்டூன் ஆக்கலாம், எல்.கே.ஜி.யை ஆக்கமுடியாதே!
பரபரவென்று ஷான்க் கையில் இருந்த பாக்கெட்டை வாங்கிப் பிரித்தேன். சிப்ஸ்களை ஒதுக்கிவிட்டு டாட்டூவைத் தேடினேன்.
வெற்றி! வெற்றி!! அந்த டாட்டூவில் ‘எல்.கே.ஜி.’ இல்லை. நிக் கையில் கிடைத்த அதே ‘2’, அதே கண், காது, மூக்கு, கை, கால்… ‘நீ சொல்றபடி பார்த்தா ஷான்க்கும் ரெண்டாங்கிளாஸ் படிக்கரானா என்ன? This is not lucky tattoo, pure random choice’ என்றேன்
நிக் சில விநாடிகள் யோசித்தான். ‘இதுவும் லக்கி டாட்டூதான்’ என்றான் உறுதியான குரலில்.
‘எப்படி?’
‘எனக்கப்புறம் இவன் ரெண்டாவது பையன் தானே ? அதான் கரெக்டா 2 வந்திருக்கு.’
நீதி : Never ever try to proove your self to your children
No comments:
Post a Comment