Powered By Blogger

Thursday, November 10, 2011

அமெரிக்காவை எதிர்க்கும் அமெரிக்கர்கள்



அமெரிக்காவுக்கு எதிராகப் பல போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றன என்றாலும் இது அமெரிக்காவுக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்தும் போராட்டம். ஐ ஹேட் பாலிடிக்ஸ் என்று முந்தாநாள்வரை ஒதுங்கியிருந்தவர்கள்தான் இன்று வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். நியூ யார்க் லோயர் மான்ஹாட்டனில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் (சுகோட்டி பூங்கா) அவர்களில் சிலர் கிட்டத்தட்ட ஒரு மாதமாகத் தங்கியிருக்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி கையசைக்கிறார்கள். தங்களுக்குள் சத்தம் போட்டு உரையாடிக்கொள்கிறார்கள். நடமாடும் உணவுக் கடைகள் சுற்றிலும் முளைத்திருப்பதால் அங்கேயே சாப்பாடும் முடிந்துவிடுகிறது. இரவில் தரைவிரிப்பைப் போட்டு உறங்குகிறார்கள்.‘வால் ஸ்ட்ரீட் மீட்கப்பட்டுவிட்டது. நாங்கள் விற்கப்பட்டுவிட்டோம்!’ என்னும் அட்டை வாசகத்தை இளைஞர்கள் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு சுற்றிவருகிறார்கள்.‘ஒரு சதவீத செல்வந்தர்கள், 99 சதவீத மக்களை ஆட்டிப் படைக்கிறார்கள்’ என்கிறது ஒரு பதாகை. ‘99 சதவீதத்தைக் காப்பாற்று’ என்கிறது மற்றொன்று.தொடக்கத்தில் காவல்துறை இவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. கண்டுகொண்டபோது, இரு தவறுகள் செய்தார்கள். இரண்டு நாளில் காலி செய்துவிடுவார்கள் என்று அலட்சியப்படுத்தினார்கள். அது நடக்காதபோது, அடித்து, உதைத்து, கீழே தள்ளி, பூட்ஸ் கால்களால் மிதித்தார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் போட்டபோது, ஐ ஹேட் பாலிடிக்ஸ் ஆசாமிகள் கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியில் வர ஆரம்பித்தார்கள்.வால் ஸ்ட்ரீட் மீதான வெறுப்பும் கசப்புணர்வும்தான் முன்புன் அறிமுகம் இல்லாத, முன்பின் போராடாத ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்றிணைக்கிறது. ஏன் குறிப்பாக வால் ஸ்ட்ரீட்? காரணம், இங்குள்ள நிதி, மூலதன நிறுவனங்கள் அமெரிக்காவின் அரசியலையும் பொருளாதாரத்தையும் அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகின்றன.ஓர் உதாரணம். இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள டாப் 400 அமெரிக்கச் செல்வந்தர்களின் மொத்த சொத்துக்களின் நிகர மதிப்பு 1.53 ட்ரில்லியன் டாலர். கடந்த ஆண்டைவிட 12 சதவீத வளர்ச்சி. பில் கேட்ஸ், வாரன் பபெட் போன்றோர் வழக்கப்படி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், குறிப்பாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் வால் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த 96 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட சீட்டாட்டம் போன்ற யூக வணிகத்தில் ஈடுபடுபவர்கள்.அமெரிக்காவை உலுக்கிய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான நிதி நிறுவனங்களும் வங்கிகளும் யூக வணிக அமைப்புகளும் வால் ஸ்ட்ரீட்டில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடிழந்து, வேலையிழந்து வீதிகளில் திண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில், அதற்குக் காரணமான நிறுவனங்கள் ஃபோர்பஸ் பட்டியலில் இடம்பெற்று ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பல, திவாலானவை. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு ஒபாமா அரசு இவர்களை மீட்டெடுத்தது.அதாவது, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை. வால் ஸ்ட்ரீட் பாதிக்கப்படக்கூடாது. இதுதானே அரசு கொள்கை? விரக்தியடைந்த அமெரிக்கர்கள் தங்கள் கோபத்தை வால் ஸ்ட்ரீட்டில் குவித்ததன் பின்னணி இதுவே. ஒரு சிறு குழுவாகத் தொடங்கிய போராட்டம் இன்று வாஷிங்டன், பாஸ்டன், மிச்சிகன், சிக்காகோ, அலாஸ்கா, கலிபோர்னியா என்று அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கிறது. விக்கிலீக்ஸ் அசாஞ்சே லண்டன் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்து பேசியுள்ளார். சல்மான் ருஷ்டி, மைக்கேல் கன்னிங்ஹாம் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற 100 எழுத்தாளர்கள் இணைய பெட்டிஷனில் கையெழுத்திட்டு ஆதரவளித்திருக்கிறார்கள்.அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலகப் பொருளாதாரத்தையும் அமெரிக்க நிதி நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன என்பதால் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவைக் கடந்து பிற நாடுகளையும் பற்றிக்கொண்டிருக்கிறது. மெல்பர்னை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆஸ்திரேலியர்கள் அமெரிக்கர்களைப் போலவே வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள். தொடங்கிய முதல் நாளே, மெல்பர்னிலுள்ள சிட்டி ஸ்கொயரில் ஆயிரம் பேர் திரண்டுவிட்டார்கள். ‘வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் சந்திக்கும் அதே பிரச்னைதான் எங்களுக்கும். எங்களுடைய ஜனநாயகம் போலியானது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் நாங்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.’ சிட்னியில், மத்திய ரிசர்வ் வங்கிக்கு எதிரில் 2000 பேர் திரண்டுவிட்டார்கள். இவர்களில் பூர்வகுடிகள், தொழிற்சங்கவாதிகள், இடதுசாரி சிந்தனை போக்கு கொண்டவர்கள் என்று பலரும் அடங்குவர்.வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வடிவம் எடுத்துள்ளது. பங்குச்சந்தைப் பெருமுதலாளிகளை எதிர்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், வங்கி அதிகாரிகள், நிதி நிறுவன அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பலரையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள். டோக்கியோ, மணிலா, தாய்பே,சியோல் என்று போராட்டம் விரிவடைந்துகொண்டிருக்கிறது. ஷாப்பிங் மால், தனியார் வங்கிகள், முக்கிய வர்த்தக கட்டங்கள் ஆகியவற்றின் முன்பு பதாகைகளை உயர்த்திபிடித்தபடி நடைபோடுகிறார்கள். முழங்குகிறார்கள். நாடகம் நடத்துகிறார்கள். வித்தியாசமான ஒப்பனைகளுடன் கவனம் ஈர்க்கிறார்கள். இத்தாலியில் உள்ள யூனிகிரெடிட் என்னும் மிகப் பெரிய வங்கியின்மீது முட்டைகள் வீசியதைத் தவிர வேறு சட்ட விரோத செயல்கள் எதிலும் யாரும் இதுவரை ஈடுபடவில்லை. ரோமிலும் வேறு சில நாடுகளிலும் கடைக் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன.‘அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!’, ‘பிலிப்பைன்ஸ் விற்பனைக்கல்ல!’ ‘ஜனநாயகம் தெருக்களில்தான் வாழ்கிறது.’ போன்ற முழக்கங்கள் பிரபலமாகிக்கொண்டிருக்கின்றன. ‘லண்டன் பங்குச் சந்தையை ஆக்கிரமிக்கவும்!’ என்னும் பெயரில் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு 6000 பேர் இணைந்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டமே உத்வேகம் அளித்திருக்கிறது.தங்கள் கோபத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்யவேண்டும் என்பதே வால் ஸ்ட்ரீட் போராட்டக்கார்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது. பொருளாதார நிபுணர்களிடம் இருந்தும் மீடியாவிடம் இருந்தும் அரசியல் விமரிசகர்களிடம் இருந்தும் அவ்வப்போது ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்று இவர்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஆதவை நாடி தீவிரப் பிரசார யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.அரபுலகப் போராட்டங்களுக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இணையம் மூலமே இவர்கள் ஒன்றிணைகிறார்கள். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த மீடியாவை மெல்ல மெல்ல தம் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள். இளைஞர்களே அதிகம் காணப்படுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் பங்கேற்கிறார்கள். தலைமை என்று எதுவுமில்லை. ஆனால் முக்கியமான ஒரு வேறுபாடு, வால் ஸ்ட்ரீட் போராட்டத்தின் நோக்கம், தலைமை மாற்றம் அல்ல என்பதுதான். இவர்கள் எதிர்பார்ப்பது சீர்திருத்தத்தை மட்டுமே. ஆனால், அதையும்கூட அவ்வளவு சுலபத்தில் செய்துவிட மாட்டோம் என்கிறது அமெரிக்கா.(புதிய தலைமுறையில் வெளியான கட்டுரை)

Saturday, September 24, 2011

ரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை


அண்மையில் இந்த திரைபடத்தை மீண்டும் பார்க்க நேர்ந்தது.. படத்தின் கதைகளம் எனது சொந்த ஊரான சேலம் சுற்றுவட்டாரத்தில் எடுக்க பட்டதால் எனது ஆவலை அதிகம் தூண்டியது...சரி படத்திற்கு வருவோம்.
படம் பார்க்க இங்கே சுட்டவும்
ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்த சமயத்திலேயே தமிழில் தணிக்கைக் குழுவால் A சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படம் அது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு புரிதல்கலையும் படிப்பினைகளையும் வழங்கிவந்து கொண்டேதான் இருக்கிறது.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி உலகத்துகான தமிழ்த்திரைப்படம். எந்த வகையிலும் உலகத் திரைப்படங்களுக்கு ஒப்பாக சொல்ல்க்கூடியது. அப்படியொரு துல்லியமான திரைக்கதையை கண்டு நான் பிரம்மித்தது கிடையாது. அதுவரை...இல்லை இன்னும் இதுவரை செய்யப்படாத சோதனைகளை இயக்கத்திலும், திரைக்கதையிலும் பிரையோகிக்கப் பட்டிருக்கும். என்னைக் கேட்டால் திரைப்பட பிரியர்களால் மறுபார்வைக்கும் விவாதத்துக்கும் உரிய சினிமா என்று சொல்லவேண்டும்.

கதை, இந்தியா சுதந்திரம் பெறுவத்ற்கு முந்திய காலகட்டங்களில் நடக்கிறது. அடிமைத்தனமும், வேலையின்மையும், அறியாமையும் ஓங்கியிருந்த காலம். நாகரீகம் எட்டிப்பார்க்காத சிறு கிராமங்களில் ஒன்றாக இருக்கிறது வண்டிச்சோலை கிராமம். படிப்பறிவும், நாகரீகமும் குன்றியிருந்த போதும் பண்பாடும், உயரிய நல்லறமும் நடத்திவந்த எளிய மக்கள். ஆண்கள் என்றால்
கோவணம் அல்லது டவுசர். பெண்கள் என்றால் ஒரு ஒற்றைச் சீலை அவ்வளவே அவர்கள் அறிந்திருந்த உடை நாகரிகம். மற்றபடி ரவிக்கை, பாடி என்ற சொல்லையெல்லாம் யாரவது டவுண்வாசிகள் மூலமாக கேட்டுள்ளார்களே ஒழிய யவரும் கண்டதுகூட இல்லை.






திரிசடை, டவுசர், தலையில் ஒருகூடை என்று தனித்துவம் ஏதும் இல்லாத சாதரண வண்டிச்சோலை வாசி செம்பட்டை. தொழில்முறை காரண‌மாக கிராமத்தைவிட்டு வெளியே வர தேவையும் அவசியமுமின்றி இருந்த மக்களிடையே செம்பட்டை(சிவக்குமார்) உள்ளூர் மக்களுக்கு தேவையானவற்றை டவுனில்(சேலம்) இருந்து வாங்கிவந்து அவர் தரும் சொர்ப்ப காசில் வயிற்றைக் கழுவும் பிழைப்பு நடத்திவருகிறான். அவனது தயவில் வாழும் அண்ணன் சடையன், அண்ணி, அண்ணன் மகள் கருப்பாயி மற்றும் அவனது விதவை தாய்.
இதற்கிடையே செம்பட்டைக்கு நந்தினி என்னும் ஒரு டவுண் பெண்ணுடன் (தீபா) திருமணம் நிச்சயமாகிறது. ந‌ந்தினி சுகபோகமான டவுண் வாழ்கைக்கு பழக்கப்பட்டவள். "செம்பட்டையான் பொண்டாட்டி 8ம் கிளாசு பெரிய படிப்பு படிச்சிருக்காம்ல.." "பொண்ணு டவுண்ல ஒரு மாதிரியாம்ல...அதுதான் இவன் தலையில கட்டிபுட்டானுக" என்றெல்லாம் பரவலாக பேச்சு இருந்தது.ஆனால் கல்யாணமாகி ஊர் வந்த போது பேசிய வாயெல்லாம் திறந்தவண்ணம் அவளையே பார்த்தபடி இருந்தன, வயது பேதமின்றி. காரணம் தீயைப் போல யாரையும் பற்றிக்கொள்ளும் அவளது அழகு மட்டுமல்ல. அவள் அணிந்திருந்த நாகரிகத்தின் அடையாளமான உடைகள் குறிப்பாக ரவிக்கை, அணிந்திருப்பது தெரியும்படியான பாடி,பாவடை வகையரா. ஒரு கிராமத்துக்குள் செம்பட்டையான் பொண்டாட்டியாக நாகரிகம் தன் முதல் காலடியை பதிக்கிறது.







முதலிரவன்று "இதென்ன சேலைக்குள் சேலை...", "அதென்ன லவுக்கைகுள்ள ஒரு துணி, வெள்ளையா.." என்று பாவாடையையும் பாடியும் குறித்து கேட்கிறான். அவள் "டவுண்லயெல்லாம் இப்பிடி தான் போட்டுக்குவாங்க" என்கிறாள். "இதற்கு முன் இதையெல்லாம் நான் பாத்ததே இல்ல...இந்த உப்புசத்துல எப்பிடித்தான் இத்தனையும் போட்டுகிறையோ...சுத்த பைத்தியக்காரப் பொண்ணா இருக்க" என்று சலித்துக்கொள்கிறான். இருவரும் ஒருவருக்கொருவர் வாசனை திரவியங்களைத் தடவிக்கொள்கிறார்கள். காமம் தீ போல பற்றிஎறிகிறது. இருவரும் கட்டியனைக்கையில் "டே...மாணிக்கம் !!!" என்று ஒரு பலத்த குரல் கேட்டு அதிர்ந்து போய், அது என்ன சத்தம் என்று விசாரிக்கிறாள். அது தனது பக்கத்துவீட்டு பெண் என்றும் தினமும் தன்பையனை அடிப்பதால் அவன் வீட்டைவிட்டு பகலில் ஓடிவிடுவதாகவும், இரவானால் அவள் ஒரு கம்பையும் விளைக்கையும் எடுத்துக்கொண்டு அவனை இப்படி அழைத்தவாறே தேடுவாள் என்றும்,இது இங்கு வழக்கமான செயல் என்றும் கூறுகிறான் செம்பட்டை. இருவரும் மீண்டும் தத்தம் உடலில் புதைகிறார்கள்.
செம்பட்டையன் பொண்டாட்டியைக் காணவரும் கிழவிகள் அவளது உடை, கால் மீது காலிட்டு அமர்ந்திருக்கும் தோரனை எல்லம் கண்டு அவளது மாமியாளை நகைக்கிறார்கள். மாமியாள் "இந்தக் கருமத்தையெல்லாம் அவுத்துப் போட்டுட்டு இதக் கட்டிக்க " என்று ஒரு நாட்டுப் புடவையைக் கொடுக்கிறாள். அதை தூக்கி எறிந்துவிடுகிறாள் நந்தினி. தலைமுறைமுரண்பாட்டுக்கான பிரச்சனைகள் அப்போதே துடங்கிவிடுகின்றன.
செம்பட்டை பொண்டாட்டி என்பவள் அந்த கிராமத்துகுள் ஒரு காட்சிப்
பொருளாகவும், புதியதை வரவேற்பவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கிறாள். பக்கத்து வீட்டுப் பெண்கள் வந்து "இது என்னக்கா? என்று அவளது ஒப்பனைப் பொருட்களைப் பார்த்து கேட்க..." இது வாசன எண்ணை...இது பவுடர், முகத்துல பூசிக்க..." என்று எடுத்து கொடுக்கிறாள். "டவுண்லயெல்லாம் இப்பிடிதான் போட்டுக்குவாங்க" என்று அடிக்கடி சொன்னாள். எல்லோர் பேச்சிலும் செம்பட்டை பொண்டாட்டி ஒரு அங்கமாக ஆகிவிடுகிறாள். அபோதும் திருச்சங்கோட்டான் "என்னங்கடா...ரொம்ப பண்றீங்க...நானுந்தான் பாத்தேன். எல்லா பொம்பளகிட்ட இருக்கறுதுதான் அவகிட்டயும் இருக்கு" என்பான்.





அந்த‌ ஊர் ப‌ண்ணையார், ப‌யில்வான் எல்லாம் செம்ப‌ட்டையின் மீது மிக‌வும் பாச‌ம் கொண்ட‌வ‌ர்க‌லாக‌ இருக்கிறார்க‌ள். ப‌ண்ணையார் ம‌க‌ளுக்கு ட‌வுண் மாப்பிள்ளைக்கு பேசி முடிக்கிறார்க‌ள். மாப்பிள்ளைக்கு ஏற்றவாறு ட‌வுண் நாக‌ரீக‌த்துக்கு ப‌ழ‌க்ககிக்கச் சொல்லுகிறார்க‌ள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் . ப‌ண்ணையார் வீட்டில் செம்பட்டையிடம் 'இந்த‌ எழ‌வெல்லாம் எங்க‌ளுக்கும்பிடிக்காது தான்...என்ன‌ செய்ய... நீ உம்பொண்டாட்டிய‌க் கூடிட்டுபோய் ட‌வுண்ல‌ இந்த‌ என்ன‌மோ பாடி, பாவட, பகுடருன்னு எல்லாம் சொல்றாங்கில்ல‌..அத்த‌ வாங்கியா..." என‌ சொல்கிறாள்.செம்ப‌ட்டையும் ஒரு த‌டைப‌ட்ட‌ பொருளை வாங்கிவ‌ருவ‌தைப் போல் வாங்கி வ‌ந்து கொடுக்கிறான்.
பண்னையார்மகளைப் பெண்பார்க்க வரும் போது அவள் "அம்மா இதை எப்படி போட்டுக் கொள்வது" என்று அவளது புதிய பாடியை அம்மாவிடம் வருகிறாள். "அவளும் அதைக் கைகளில் வாங்கி, முன்னும் பின்னுமாக பார்த்துவிட்டு...எனக்கென்னடி தெரியும். முன்னப்பின்ன போட்டிருந்தா தானே தெரியும். எப்படியோ போட்டுக்க" என்கிறாள்.பெண்ணைப் பார்க்க வரும் மாப்பிள்ளையிடம் பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்க..."பெண்ணைப் பிடித்திருக்கிறது..ஆனால் அவ பாடி போட்டிருக்கறது தான் பிடிக்கல" என்கிறான். காரணம் அவள் அதுவரை பாடியை ரவிக்கைக்கு மேல் அணிந்திருப்பாள். மாப்பிள்ளை போகும்போது "அதை உள்ளே போடச் சொல்லுங்க" என்று கூறிச்செல்கிறார்.
செம்பட்டை கிராமத்துப் பெண்களுக்கு ரகசியமாக ரவிக்கை, ப்ரா, மை டப்பா போன்ற நாகரிக சுட்டிகளை வாங்கிவருவது வாடிக்கை ஆகிறது. செம்பட்டை‍ - அவன் மனைவி என்ற இருவர் மூலமாக அந்த கிராமத்தில் நாகரிகம் தன் கால்களை பதிக்க விரும்பியது.
இதற்கிடையே ஒருதினம் தன் ஊரிலிருந்து கிராமஃபோனை எடுத்துவருகிறாள் நந்தினி. ஒரு பெட்டி அதையொட்டி அண்டா-வாய் போல ஒரு கருவி. இதிலிருந்து பாட்டு வரும் என்று யாராலும் நம்ப முடியவில்லை. ஆளே இல்லாம எப்பிடி பாட்டுவரும் என்றுகேட்கிறாள் ஒரு மனைவி "ஏ...புள்ள அந்த பெட்டிக்குள்ள ஒருத்தன் படுத்திருக்காம்புள்ள...அவன் தான் பாடுறான்"
"ஏன் மச்சான்...பெட்டிகுள்ள இருக்குறவனுக்கு சோறு தண்ணி யெல்லாம் வேணாமா " இது ஒரு சமர்த்தியமான மனைவி.
அதற்கு புத்திசாலி கனவன் "யாருல இவ...அந்தா குண்டாமாதிரி இருக்குள்ள...அதுல தான் சோறு, கொழம்பு எல்லாம் போடுவாங்க புள்ள".
ஊரே செம்பட்டையான் வீட்டின் முன் கூடுகிரது,கூத்தும் கூச்சலுமாக. கோபமடையும் செம்பட்டையின் தாய் "இதென்னடி குடியிருக்கிற வீடா...இல்ல தேவிடியா வீடா" என கேட்கிறாள். பதிலுக்கு அவள் "எனக்கு தெரியாது...இது உன் வீடு தானே நீயே சொல்லு" என்கிறாள். கோபமடையும் மாமியாள் எரியும் கொள்ளிக்கட்டையால் அவளது தொடையில் சூடு வைத்துவிடுகிறாள்.இரவு வீட்டிற்க்கு வரும் செம்பட்டை நந்தினியை காணவில்லை என்று பதறுகிறான். நந்தினி மாமியாளுக்கு பயந்து எங்கோ ஒளிந்துகொண்டுவிடுகிறாள். இந்த காட்சியில் எப்போதும் காணாமல் போகும் மாணிக்கத்தை அவனது தாய் கண்டுபிடித்து கூட்டிவருகிறாள்.தொடர்ந்து வரும் உளைச்சளால் செம்பட்டை தனியாக குடிசெல்ல தீர்மாணிக்கிறான். ஊர் பெரியவர்கள் பேசி பிரித்துவைக்கிறார்கள். செம்பட்டையின் தாய் "இந்த கெழவியோட அருமை ஒனக்கு ஒருநாள் ஒரைக்கும்ல" என்று கண்கலங்குகிறாள்.






புதிதாக குடிசை அமைத்து தனிக்குடித்தனம் துடங்குகிறான். ஊர் பெரியவர்களை எல்லாம் அழைத்து விருந்தளிக்கிறான். நந்தினியின் அப்பாவிற்கு பழக்கமான ஒரு இளைஞன் ஜீப் வண்டியில் வந்திறங்குகிறான். நந்தினியின் தந்தை அவரை 'மாணிக்கம்' என்றும், (ஆங்கிலேய) துரையிடம் உயர்பதவியில் இருப்பதாகவும் அறிமுகப் படுத்துகிறார். ஒழுங்காக வெட்டப்பட்ட தலைமுடி, செறிவாக மழிக்கப்பட்ட தாடி, சின்னதாக ஒதுக்கப்பட்ட மீசை, குழாய் பேண்ட், சுத்தமாக அயன் செய்யப்பட்ட சட்டை என்று வந்து நின்ற மாணிக்கத்தை வைத்த கண்வாங்காமல் பார்க்கிறாள்நந்தினி. அவன் அவள் கண்களில் கண்ட இச்சையை அறிந்துகொள்கிறான். அவனது ஒவ்வொறு செய்கைகளையும் நடவடிக்கைகளையும் ரசிக்கலானாள். எதற்கும் ஏற்புடைமையில்லாத நகர மனம் தானாக கனவனோடு ஒத்து மதிப்பிட ஆரம்பிக்கிறது. அதன் பிறகு கணவனின் ஒவ்வொரு செயலும் அவளுக்கு அருவருப்பையும் திருப்தியின்மையையும் தருகிறது






இதற்கிடையில் ஆங்கிலத்துரை துடங்கும் தொழிற்சாலைக்கு வேலைஎடுக்கும் மாணிக்கம் செம்பட்டைக்கு ஊரில் எல்லோரையும் தெரியும் என்பதால் அவனையே ஏஜன்டாக நிர்னையிகலாம் என்று பரிந்துரைக்கிறான். அவன் மூலம் சேரும் ஒவ்வொருவருக்கும் செம்பட்டைக்கு பணம் கிடைக்கிறது.
சில சாக்குபோக்குகலை வைத்து மாணிக்கம் நந்தினியை சந்திக்க செம்பட்டை வீட்டிற்க்கு அவனில்லதபோது வருகிறான். அவளது தந்தை அவளையும் செம்பட்டையையும் கோவில்திருவிழாவிற்கு வரசொன்னதாக சொல்லுகிறான். அவள் உள்ளே அழைத்து காப்பி கொடுக்கிறாள். அவன் வீட்டை மிக அழகாக வைத்திருப்பதாக சொல்கிறான். அவள் அவன் இடையிடையே ஆங்கிலம் பேசுவது மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறாள். அவன் விடை பெறுகிறான் (டே மாணிக்கம்!!! என்ற பெண்ணின் குரல் அவளுள் உரத்து ஒலிக்கிறது).
பண்ணையார் மகளின் திருமண ஏற்பாடு வேளைகளில் மும்மரமாக இருப்பதால் கோவில் திருவிழாவிற்கு வரமுடியாதெனவும், யாரவது ஒருவராவது போக வேண்டும் என்பதால், நீ வேண்டுமானால் மாணிக்கம் சாரின் ஜீப்‍காரில் போய்வரும்படியும் சொல்லுகிறான் செம்பட்டை.
அந்த மாலைப்பொழுது வருகிறது. எதிர்பார்த்த ஜீப்பில் வராமல் மாணிக்கம் மோட்டார் சைக்கிளில் வருகிறான். மோட்டார் சைக்கிள் பயணத்தில் இருவரது உடலும் அவற்றுக்கே உண்டான இச்சா மொழியில் பேசத்துடங்கிவிடுகின்றன. மலைக்காற்றும் தொலைதுரப் பயனமும் மறைந்திருந்த உணர்வுகளை வெளிப்படுத்த செய்தன‌. உணர்ச்சிமிகுதியில் இருவரும் வழியிலேயே கலவியில் ஈடுபடுகிறார்கள் (டே! மாணிக்கம் என்ற பெண்ணின் குரல் அவளுள் உரத்து ஒலிக்கிறது).
"செம்பட்டையான் பொண்டாட்டி முந்தானைல மண்ணு" (அதாவது அவளது முந்தி சுத்தமில்லை, கணவனல்லாது வேறு யாருக்கும் விரிக்கப்பட்டதாக பொருள்படும் சொல்லாடல்) என்று திருச்சங்கோட்டான் சொன்னதாக கேள்விப்பட்டு அவனுடன் சண்டையிடுகிறான் செம்பட்டை. பயில்வான் வந்து தடுத்து விடுகிறார். மனமுடைந்த நிலையில் வீட்டிற்கு வரும் செம்பட்டைக்குஅதிர்ச்சி காத்திருக்கிறது. மாணிக்கத்துடன் அவனது மனைவி பகல் கலவியில் ஈடுபட்டிருக்கிறாள். செம்பட்டையைக் கண்ட மாணிகம் தப்பி விடுகிறான். நந்தினி வெறும் மேனியாக இருக்கிறாள். நாகரிகத்தின் அடையாளமாக அவள் சொன்ன அவளது ரவிக்கை,பாடி,பாவாடை எல்லம் தரையில் கிடப்பதை காட்டுகிறார்கள். செம்பட்டை எதுவும் பேசாதவனாக‌வீட்டை விட்டு விலகி நடக்கத்துடங்குகிறான். நந்தினிக்கு அவளது சீலைத்துணி மட்டும் தூக்குக் கயிராகத் தெரிகிறது. ஊர்க்காரர்கள் ஆற்றை நோக்ககி விரைகிறார்கள். அங்கு செம்பட்டை தண்ணீரில் முழ்கிதற்கொலை செய்துகொண்டிருந்தான்.





ஊரார் எதுவும் பேசாமல் பார்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலர் செங்கோட்டையான் அடித்து கொன்று விட்டானென்றும், சிலர் வீட்டு விவகாரத்தால் மனமுடைந்து இறந்துவிட்டானென்றும், சிலர் துரை விவகாரதுல ஏதாவது நடந்திருக்குமோ என்றும் பேசிக்கொண்டனர்...யவருக்கும் உண்மையான காரணம் தெரியாமலேயே...
ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் Symbolism த்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு. படம் வந்த காலகட்டத்தில் இப்படியொரு கதைக்கருவைச் சொல்ல வந்ததே மிகப்பெரிய சோதனைமுயற்சி. மக்கள் குறிப்பாக பெண்கள் தங்களது அந்தரங்கத்தை மையமாகக்கொண்ட படம் என்று தவிர்த்துவிட்டிருக்கலாம். ஆனால் படம் முழுக்க சொல்லப்பட்டதுஉலகப்பொதுமறையான ஒரு விஷயத்தை. ஒரு கலாச்சார மாற்றத்தை ஒரு சமூகம் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதை சொல்ல வந்திருப்பார்கள்.
இங்கு பாடி,பாவாடை என்று சொல்வது வெறும் உள்ளாடைகள் என்ற பொருளில் அல்ல, அது ஒர் குறியீடு. அது ஒரு நாகரிகத்தின் குறியீடு. நந்தினி என்பது புதுமையின் வெளிப்பாடு.
செம்பட்டை என்பவன் ஒரு ஊடகம், அவ்வளவு தான். அவனே மக்களுக்கும் வெளியுலகுக்குமான இணைப்புக்கயிறு. அதனால் தான் புதுமை முதலில் அவனை வந்தடைகிறது (நந்தினியுடனான திருமணம்) .
செம்பட்டையின் தாய் எனப்படுவது ஞாயப்படுத்தப்பட்ட பழமைவாதத்தின் குறியீடு. பழமைவாதத்திலிருந்து திரும்பிச்செல்லுதலுக்கான வழியின்மையின் நம்பிக்கையின் காரணமாகவே செம்படையின் தாய் "அப்புறமும் உசுரோட இருக்கப் போறான்ல‌...இந்தக் கெழவியோட அரும உனக்கு ஒரு நாள் தெரியும்" என்கிறாள்.
"மாணிக்கம்" என்னும் கதாபத்திரம் சமூகத்தால் அடக்கி வைக்கப்பட்ட கருத்தியல் சுதந்திரம். சுதந்திரத்தைத் தேடி தினமும் வெளியே ஓடிச்சென்றுவிடும் 'மாணிக்கம்' என்னும் பக்கத்து வீட்டுப் பையன். கையில் கம்போடு அவன் தாய் அவனைத்தேடுகிறாள். கம்பு என்பது அதிகாரத்தின் வெளிப்பாடு. லாந்தர் விளக்கு என்பது முன்மொழியப்பட்ட வழிநடத்துதல். இதை வியப்புறும் படியாக கையாண்டு இருப்பது திரைக்கதையில் குறிப்பிடத்தக்க அம்சம். நந்தினி மாமியாரால் காலில் சூடுவைக்கப்பட்டு வீட்டைவிட்டு ஓடி ஒளிந்துகொள்கிறாள். அப்போது சிறுவன் மாணிக்கம்தாயால் பிடிபட்டுவிடுவதப்போல காட்டியிருப்பார்கள். இது சூடுவைக்கப்பட்ட சம்பவத்தை புதுமையின் மீது அதிகாரத்தின் வெற்றியை குறிப்பிடுவ‌தாகும். பின்னால் ஆங்கிலத்துரையின் அதிகாரியாக வரும் கதாபாத்திரத்திற்கும் 'மாணிக்கம்' என்ற பெயர் சூட்டியதும். நந்தினியின் இச்சை வெளிப்பாட்டின் போது 'டே! மாணிக்கம்' என்ற பெண்குரல் ஒலிப்பதும் இயக்குனரின் மேதமையை விளக்கும் உத்திகள்.
திருச்சங்கோட்டான் (திருச்சங்கோடை சேர்ந்தவன்). இது சேலத்தின் அருகில் அமந்த மற்றோரு பெரிய டவுண். அதனால் அவனுக்கு இந்த புதுமை பழக்கப்படிருந்தது. திருசங்கோட்டான் என்பது இங்கு தயார் செய்யப்பட்ட நடுத்தர மணத்தின் குறியீடு. அவன் எல்லாவற்றிற்கும் ஏற்புடைமை உடையவனாகவும், பாதுகாப்பின்மை உணர்வினால் நடுத்தரமணமுடையவனாகவும் இருக்கிறான்.
திருச்சங்கோட்டான் மனைவி பனைமரத்தில் இருக்கும் தன் கணவனிடம் "இந்தா...எனக்கும் அந்த செம்பட்டையான் பொண்டாட்டி மாதிரி பாடி, பாவாடையெல்லாம் வாங்கித்தருவியா..?" என்று கேட்க கோபமடையும் அவன் இரக்கிக்கொண்டிருந்த கள்ளை அப்படியே அவளது தலையில் போட்டு உடைத்து விடுகிறான்.
நாகரிக உடை சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து முன்னிருத்தப்பட்டாலும் அவை வீண் செலவாக கருதப்பட்டது. இது சமுதாயத்தின் அக்கரையின்மையும், தன்னிலையிலிருந்து மாற விரும்பாத Xenophobia வை காட்டுகிறது. ஒரு வீட்டில் தரையை உரசுமாறு சேலை அணிந்து வாசல் பெருக்குகிறாள் ஒரு பெண். இதைக்காணும் மாமியாள் "தொடப்பம் எதுக்குடீ முண்ட‌...அதான் சீலைலையே கூட்டுறியே" என திட்ட அவள் சீலையை தூக்கி சொருகுகிறாள். அவள் அணிந்திருக்கும் பாவாடை தெரிகிறது. அதிர்ச்சி அடையும் மாமியாள் "இந்தக் கொடுமையை எங்கு போய் சொல்வேன்...சீலைக்குள்ள இன்னொரு சீல கட்டியிருக்கா..." என்று கூச்சலிடுகிறாள். அதை வாங்க பணம் கொடுத்த மகனையும் "இது வீண் செலவு" என்று கடிந்துகொள்கிறாள்.
படத்தில் வரும் வசனங்கள் மிக நுணுக்கமானதாகவும்,அதீத ஆளுமையுடனும் கையாளப்பட்டிருக்கும். முதல் பாதியில் பண்ணையாரின் சிறிய மகன் விளக்கு எரிந்து சுவற்றில் படிந்த கரியில் செம்பட்டை, நந்தினி என்று எழுதிக்காட்டி சந்தோஷிக்கிறான். நந்தினி மாணிக்கத்திற்கான கள்ள உறவு நடைபெற்று தொடர்ந்து வரும் காட்சியில் முன்பு காட்டப்பட்ட "செம்பட்டை, நந்தினி" என்று விளக்கு எரிந்து படிந்த கரியில் எழுதப்பட்ட 'நந்தினி' என்பது அழிந்து இருக்கிறது. செம்பட்டை 'அது எங்கடா காணோம் என்று கேட்க பண்ணயார் மகன் "அதுல கரி புடிச்சுருச்சு செம்பட்ட...வெளிச்சம் பட பட கரி புடிக்கதானே செய்யும் " என்று சொல்லுகிறான். வெளியுலகிற்கு பிரயத்தனப்படுத்தும் போது அதன் எச்சப்பொருளும் கிட்டதான் செய்யும். புதிய நாகரிகம் வரும் போது அதனூடே நல்லவை கெட்டவையும் வருதல் இயற்கை என்பதை அடுத்த தலைமுறைக்காரன் சொல்வதாக படத்தில் அமைத்திருப்பது படைப்பாளியின் மேதமையைக் காட்டுகிறது.
ஒரு காட்சியில் டவுணிலிருந்து பெட்ரமோஸ் லைட்டை வாங்கி வீட்டில் வைத்திருக்கும் நந்தினியிடம் 'இது என்ன...இப்பிடி கண்ணபரிக்குது' என்பான் செம்பட்டை. அதுக்கு அவள் 'இது கேஸ் லைட்டுங்க...சேலத்துல இருந்து வாங்கியாந்தன்... பாருங்க நம்ம லாந்தர் லைட்டவிட எவ்வளவு பிரகாசமா இருகுன்னு'. அதற்கு செம்பட்டை 'ஆமாமா...அது என்னமோ அப்பிடிதான். லாந்தர் லைடுல இவ்வளவு வெளிச்சமும் வராது..அது கண்ணையும் பரிக்காது' என்பான். இதுவும் கதைக்கருவை Suble ஆக‌ சொல்லும் ஒரு வசனமே.
தமிழ் திரைப்படத்தில் இப்படியொரு சோதனை முயற்சி நடந்ததாகவோ, இப்படிப்பட்ட படங்கள் வந்ததற்கான சுவடோ இப்போதிய படங்களிலோ இயக்குனர்களிடமோ காணப்படுவதில்லை. முன்பு சொன்னதைப் போலவே எந்த காலத்திற்கும் பொருத்தி பார்க்கக்கூடிய திரைப்படமாக உள்ளது. கலாச்சாரத்தின் பேரில் ஞாயப்படுத்தப்பட்ட தவறான வழிகாட்டுதலுக்கு உட்படிருக்கும் தமிழ் சமூகத்தின் பார்வைக்கு வைக்க வேண்டிய திரைப்படம். கடுமையான ஃபாஸிச குண்டாந்தடி கலாச்சாரத்தை கடைபிடிக்கும் தமிழ் கலாச்சாரமும், அதன் விளைவாய் அதிகரித்து வரும் சமூக, பாலின அச்சுரத்தல்களுக்கு தளமக மாறிவரும் தமிழகத்திற்கு மீண்டும் மறுபார்வைக்கு உட்படுத்தவும், விவாத மேடைகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டியதுமான திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி.
ஒரு இனத்தின் சமூகப்பார்வை அதன் அரசியல்,கலை,ஆட்சி,பொருளாதாரம் எல்லாத்தோடும் சம்மந்தப்பட்டதே.
கலாச்சார பாதுகாவலர்களாய் நிற்கும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதற்கான‌ சாத்தியக்கூறுகளே இல்லை. நாட்டின் 40 சதவிகிதம் பாலியல் வன்முறைகள் தமிழகத்தில் நடக்கின்றது. துரிக்கியில் ஒரு அழகிய பெண்ணை 1000 அமரிக்க டாலர்களுக்கு வாங்கிவிடலாம். அவளை வைத்து ஒரே இரவில் லட்சங்களை சம்பாதிக்கிறாகள் அந்த pimps. பெண்ணைப் பொத்திபொத்தி வைக்கும் அரபு நாடுகளில் இன்னும் பெண்களை ஒரு commodity யாக விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு சமுதாய கலாச்சார மாற்றங்கள் நிகழும் போதும் அதை மக்களுக்கு எடுத்துச்செல்கிற சில செம்பட்டைகளும், நந்தினிகளும் பலியாகத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட இழப்புகளற்ற ஒரு மாற்றத்தை கடந்துவர சாத்தியமாகும் சூழலில் தான் நாம் எதிர்பார்க்கும் நன்மக்களும் நற்சுற்றமும் உருவாக முடியும்.



வாய்ப்பு கிடைத்தால் திரைபடத்தை ஒருமுறை பாருங்கள்....



நன்றி !!

Thursday, September 22, 2011

செம்பட்டைக்குக் கல்யாணம்

நேற்று இணையத்தில் ஒரு திரைப்பட விமர்சனம் வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி: ‘படத்தில் சில நிமிடங்களே வருகிற சின்னச் சின்னக் கதாபாத்திரங்களைக்கூட இயக்குனர் கவனித்துச் செதுக்கியிருக்கிறார்.’
இதைப் படித்தபோது (வழக்கம்போல்) எனக்கு ஒரு பாட்டுதான் நினைவுக்கு வந்தது: ’அன்னக்கிளி’ புகழ் தேவராஜ் – மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘வெத்தல வெத்தல வெத்தலயோ’!
மிஞ்சிப்போனால் ஆறு நிமிடம்மட்டுமே ஒலிக்கும் பாடல் இது. ஆனால் அதற்குள் ஒரு கிராமத்தின் குறுக்குவெட்டுத்தோற்றத்தைப் பார்த்துவிடமுடியும்.
அந்தக் கிராமத்தின் பெயர் வண்டிச்சோலை. அங்கே வசிக்கும் செம்பட்டை என்பவனுக்குக் கல்யாணம். அதைப்பற்றி ஊரில் உள்ளவர்களுக்குச் சொல்லியபடி பாடிச் செல்கிறான்.
பொதுவாக திரையிசையில் மெலடிக்குதான் மரியாதை அதிகம். கொஞ்சம் வேகமான தாளக்கட்டோடு வருகிற பாடல்களெல்லாம் ரசிக்கப்படும், விரைவில் மறக்கவும் படும்.
ஆனால் இந்தப் பாட்டு அப்படியில்லை. மேலோட்டமாகப் பார்க்கும்போது வெறும் துள்ளாட்டப் பாடலாகத் தெரிந்தாலும், வெளியாகி முப்பது வருடங்கள் கடந்து இன்றும் அதே துள்ளலுடன் கேட்கப்படுவதே இதன் தரத்துக்குச் சாட்சி.
’வெத்தல வெத்தல வெத்தலையோ’ என்று தொடங்கும் பல்லவியில் ஒரு குழந்தைக் குதூகலத்தைக் கொண்டுவருகிறார் மலேசியா வாசுதேவன். பின்னர் சரணங்களில் இது இன்னும் authenticஆக ஒலிக்கிறது (‘ச்சொன்னாங்க ச்சொன்னாங்க’). இந்தப் பாடலில் ஏகப்பட்ட பரத நாட்டிய பாவனைகளோடு நடித்திருக்கும் சிவக்குமாருக்கு இவருடைய குரல் மிகக் கச்சிதமாகப் பொருந்திப்போகும்.
சிவக்குமாரைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும். இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் கமல், மோகன், ராமராஜனுக்குதான் சென்றிருக்கின்றன என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்பாக அந்த அதிர்ஷ்டம் சிவக்குமாருக்கு அடித்தது. தன்னுடைய முதல் பட நாயகன் என்பதாலோ என்னவோ, இவருக்குமட்டும் ராஜா குறை வைத்ததே இல்லை. சாம்பிள் வேண்டுமென்றால், ’மனிதனின் மறுபக்கம்’ படத்தில் வருகிற ‘ஊமை நெஞ்சின் சொந்தம்’ அல்லது ‘கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன?’ பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்.
நிற்க. சிவக்குமார் புராணம் போதும், செம்பட்டைக்குத் திரும்புவோம்.
’வெத்தல’ப் பாட்டில் ’அரை டவுசர்’ சகிதம் ஊரைச் சுற்றிவரும் செம்பட்டை சந்திக்கும் முக்கியமான பாத்திரங்கள்: ‘ஏலே சோதாப்பயலே, ஜோரா நடந்து வாடா முன்னாலே’ என்றும் ‘கோணவாயா’ என்றும் அவனால் விளிக்கப்படுகிற உதவிப்பையன்கள் இருவர், கிராமவாசிகளுக்கு இட்லி விற்கும் பாட்டி, மோர்ப்பந்தல் தாத்தா, கள்ளுக்கடை வாசலில் மஸாஜ் செய்துகொண்டபடி சின்னப் பானையில் போதை ஏற்றிக்கொள்ளும் உள்ளூர் பயில்வான்.
பாட்டியிடம் இட்லி (ஓர் அணாவுக்கு நான்கு) வாங்கித் தின்னும் சின்னப் பையன் ஒருவன் ‘இட்லி வரவர எளைச்சுகிட்டே வருதே’ என்று குற்றம் சாட்டுகிறான். அதற்குப் பாட்டி சொல்லும் பதில்: ‘ரெண்டணாவுக்கு ஒரு இட்லி வாங்கித் தின்ற காலம் வரும்டா’!.
இப்போது இலையில் இட்லி பரிமாறும் பாட்டிக் கடைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுக்குச் சரவண பவன் / அடையாறு ஆனந்த பவன் விலை நிலவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பாட்டியின் கடையில் செம்பட்டை இட்லி சாப்பிடுவதில்லை. திருமண விவரத்தைச் சொல்கிறான். ‘சேலத்துக்குப் போறேன், ஏதாவது வாங்கிவரணுமா?’ என்று கேட்டு ஒரு மினி மளிகை லிஸ்டை வாங்கிக்கொள்கிறான். இதுவும் கிராமத்துப் பழக்கம்தான். என்னைமாதிரி பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்குப் புரியாது.
செம்பட்டையிடம் பத்தமடைப் பாயும் ஏலக்காயும் வாங்கிவரச் சொல்லும் பாட்டி கடைசியாகக் குரலை இறக்கி ‘ஒரு மூக்குப்பொடி டப்பி’யும் வாங்கிவரச் சொல்கிறாள். இதில் ரகசியம் ஏன் என்பது நம் ஊகத்துக்கு விடப்படுகிறது.
தவிர, பாட்டி சொல்வது ‘டப்பா’ இல்லை, ‘டப்பி’. ஹிந்தியிலிருந்து வந்த ‘டப்பா’ இப்படி மாறியதற்குக் காரணம் புரியவில்லை. இப்போது யாரும் இதைப் புழங்குகிறார்களா என்பதும் தெரியவில்லை.
வசனக் காட்சிகள் முடிந்ததும், Raja takes over. கம்பன் வீட்டுக் கட்டுத்தறி, சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு வரிசையில் ஒரு மளிகை லிஸ்டை மெட்டில் உட்காரவைத்து, அதையும் ரசிக்கும்படி செய்தது ராஜா – கங்கை அமரன் (பாடலாசிரியர் அவர்தான் என்று நினைவு) இருவரின் மேதைமைதான்.
செம்பட்டை அடுத்ததாகச் சந்திக்கும் தாத்தா ஒரு ஜொள்ளர். வயசுப்பெண்ணிடம் ‘என்னைக் கட்டிக்கறியா?’ என்று கேட்டு அறை வாங்குகிறார். அதைப் பார்த்துச் சிரிப்பதற்காக ஒரு வெட்டிக் கூட்டம் அங்கே உட்கார்ந்திருக்கிறது.
அவரிடம் போய் செம்பட்டை தன்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்கிறான். ‘உன் பொண்டாட்டிக்கு மொதோ ராத்திரியில மொதோ ஆசிர்வாதம் நான்தான் செய்வேன். சம்மதமா?’ என்கிறார் சபலிஸ்ட் தாத்தா. விவரம் புரியாத செம்பட்டை ‘ஆகட்டுமுங்க’ என்கிறான். வெட்டிக் கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்கிறது. இவன் திருதிருவென்று விழித்தபடி விலகிச் செல்கிறான்.
அப்போதும் அவனுக்கு விஷயம் புரியவில்லை. ‘(மனைவியை அழைத்துக்கொண்டு) நெசமாக வருவேங்க, வயசான மனுஷங்க, வாயார மனசார வாழ்த்தணும் நீங்க’ என்று பாடியபடி செல்கிறான்.
அடுத்து வரும் பயில்வானும் ஒரு சுவாரஸ்யமான பாத்திரம்தான். அவருக்கு ஏற்கெனவே செம்பட்டையின் திருமணத்தைப்பற்றித் தெரிந்திருக்கிறது. அவனிடமே முந்திரியும் பாதாமும் பிஸ்தாவும் திராட்சையும் வாங்கிவரச்சொல்லிப் பரிசளிக்கிறார். ‘இதையெல்லாம் சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கோ’ என்கிறார்.
வழக்கம்போல், செம்பட்டை விழிக்கிறான். ‘எதுக்குங்க? நான் என்ன குஸ்தியா பிடிக்கப்போறேன்?’ என்கிறான்.
’குஸ்தி ரொம்ப சுலபம். இது அப்படியில்லை’ என்று கண்ணடிக்கிறார் பயில்வான். செம்பட்டை இதையும் பாடியபடி சேலத்தை நோக்கி நடக்கிறான்.
சேலம்? பின்னாளில் ‘செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே, சேல உடுத்தத் தயங்கறியே’ என்று பாடி அருளிய மிஸ்டர் சின்ராசுவின் வண்டிச்சோலைதானா இது? சேலம் அருகே எங்கே இருக்கிறது? அடுத்தமுறை அந்தப் பக்கம் போகும்போது விசாரிக்கவேண்டும்.
இன்னொரு சந்தேகம், பயில்வான் ’ஏழு தோலானுக்கு பாதாமும் பிஸ்தாவும்’ என்கிறாரே. அதென்ன தோலான்? எடை அளவா? அல்லது அந்தக் காலக் கரன்ஸியா?
நிறைவாக, அதிமுக்கியமான கேள்வி, செம்பட்டைக்குக் கல்யாணம் ஆச்சா, இல்லையா? அந்த மோர்ப்பந்தல் தாத்தாவுக்கு?

பாடலை காண இங்கே கிளிக் செய்யவும்....

Thursday, June 16, 2011

டாட் "டூ"

ஊர் சுற்றித் திரும்பினோம். வழியில் ஒரு பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்கினோம்.
எனக்கு இரண்டு மகன்கள் : நிக் மற்றும் ஷான்க் இருவருக்கும் பிடித்த சாப்பாட்டுப் பண்டம், அடுத்தவர் கையில் இருப்பது. பிடித்த உடை, அடுத்தவர் அணிந்திருப்பது. ஆகவே எதை வாங்கினாலும் அச்சு அசல் ஒரேமாதிரியாக இரண்டு வாங்கிவிடுவேன். மனிதனால் சாத்தியமாகக்கூடிய அதிகபட்ச டெசிபல் * 2 சத்தத்தில் சண்டை ஒன்றைக் கேட்பதைவிட, கொஞ்சம் கூடுதலாகச் செலவழித்துவிடுவது உத்தமம்.
ஆக, இந்தக் கடையில் நான் ரெண்டு பாக்கெட் சிப்ஸ் வாங்கி ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தேன். ரெண்டும் ஒரே கலர், ஒரே எடை, ஒரே சுவை, பாக்கெட் ஓரத்தில் பிசிறு தட்டியிருந்ததுகூட ஒரேமாதிரி இருந்தது. எந்தவிதத்திலும் அவர்கள் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது. நிம்மதி!
நிக் தனக்குக் கிடைத்த சிப்ஸ் பாக்கெட்டை உடனே பிரித்துச் சாப்பிட ஆரம்பித்துவிட்டான். ஷான்க் அதைக் கையில் வைத்து அழகு பார்த்துக்கொண்டிருந்தான்.
திடீர்என்று நிக் கையில் ஏதோ சிக்கியது. ‘2’ என்ற எண்ணுக்குக் கண், காது, மூக்கு, கை, கால் வரைந்த ஒரு டாட்டூ.
அதைப் பார்த்ததும் நிக் குஷியாகிவிட்டான். ‘நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கறதால எனக்கு ‘2’ வந்திருக்கு’ என்றான்.
‘நோ சான்ஸ்’ என்றேன் நான். ‘இது ஏதோ ரேண்டமா வர்றது.’
‘இல்லவே இல்லை. இதெல்லாம் லக்கி(?) டாட்டூ, நாம என்ன க்ளாஸ் படிக்கறோம்-ன்னு தெரிஞ்சுகிட்டுக் கரெக்டா வருமாம், என் ஃப்ரெண்ட் ஆரவ்வ் சொல்லியிருக்கான்
எனக்குச் சிரிப்புதான் வந்தது. கூடவே, அவன் நினைப்பது தவறு, நான் சொன்னதுதான் கரெக்ட்’ என்று நிரூபிக்கிற ஈகோவும். ஷான்க் கையில் பிரிக்கப்படாமல் இருந்த சிப்ஸ் பாக்கெட்டைப் பார்த்தேன். ஒரு நல்ல ஐடியா கிடைத்தது.
‘ஒருவேளை நீ சொல்றது உண்மை-ன்னா, இப்ப ஷான்க் பாக்கெட்ல என்ன டாட்டூ இருக்கும்?’ என்று கேட்டேன்.
நிக் சில விநாடிகள் யோசித்துவிட்டு. ‘எல்.கே.ஜி. டாட்டூ’ என்றான்.
அந்த விநாடியில், என் ‘வெற்றி’ உறுதியாகிவிட்டது. ரெண்டாம் நம்பரைக் கார்ட்டூன் ஆக்கலாம், எல்.கே.ஜி.யை ஆக்கமுடியாதே!
பரபரவென்று ஷான்க் கையில் இருந்த பாக்கெட்டை வாங்கிப் பிரித்தேன். சிப்ஸ்களை ஒதுக்கிவிட்டு டாட்டூவைத் தேடினேன்.
வெற்றி! வெற்றி!! அந்த டாட்டூவில் ‘எல்.கே.ஜி.’ இல்லை. நிக் கையில் கிடைத்த அதே ‘2’, அதே கண், காது, மூக்கு, கை, கால்… ‘நீ சொல்றபடி பார்த்தா ஷான்க்கும் ரெண்டாங்கிளாஸ் படிக்கரானா என்ன? This is not lucky tattoo, pure random choice’ என்றேன்
நிக் சில விநாடிகள் யோசித்தான். ‘இதுவும் லக்கி டாட்டூதான்’ என்றான் உறுதியான குரலில்.
‘எப்படி?’
‘எனக்கப்புறம் இவன் ரெண்டாவது பையன் தானே ? அதான் கரெக்டா 2 வந்திருக்கு.’


நீதி : Never ever try to proove your self to your children

Thursday, June 2, 2011

HERO HONDA - SPLENDER








SPLENDER - உச்சரிக்கும் போதே ஒவ்வொரு இளையதலைமுறை பைக் பிரியர்களுக்கு இது ஒரு மாயஜால வார்த்தை. ஆம் கடந்த ஏழு ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே இருக்கும் ஒரு வாகனம் இல்லை இல்லை இரண்டு வாகனங்கள்.. எங்கள் தந்தையின் பழைய லாம்ப்ரேட்டா ஸ்கூட்டர் தான் நானும் என் தம்பியும் ஆசைதீர பார்த்த முதல் இருசக்கர வாகனம் அப்போது முதல் இருசக்கர வாகனத்தின் மீது தீரா காதல்.படித்து முடித்து வேலைக்கு செல்லும் பொது இது போன்று இருசக்கர வாகனத்தை சொந்தமாகி கொள்ள வேண்டும் என எங்கள் மனதில் ஒரு ஆசை.



அதே போல் வேலைக்கு சென்றவுடன் வாங்கிய முதல் வாகனம் தான் இந்த SPLENDER - இன்று கார் வாங்கும் அளவிற்கு உயர்ந்து இருந்தாலும் மனம் என்னவோ முதன் முதலில் வாங்கிய வாகனத்தின் மீதே செல்கிறது. என் தம்பியின் நிலையும அதே தான். இன்று அவன் அமெரிக்காவில் நல்ல பணியில் இருந்த போதும் அவன் இன்னும் அவனுடைய பழைய வாகனத்தை விற்கவில்லை

முதன் முறையாக நான் இந்த பைக்கைப் பார்த்தது 1998 ஆம் ஆண்டின் ஒரு மே மாத காலைப்பொழுது. எங்கள் பள்ளி தேசிய மாணவர் படையின் முகாம். காலையில் உடற்பயிற்சி முடிந்து சப்பாத்தி ரேஷனுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோதுதான் பார்த்தேன்.. ஒரு ராணுவ வீரர் ஓட்டிக்கொண்டு வந்தார். சாம்பல் நிறம். அப்போது எனக்குத் தெரியவில்லை.. இந்த பைக்தான் இந்திய இரு சக்கர வாகனச் சந்தையை எதிர்காலத்தில் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்யப்போகிற வாகனம் என்று.! இதுவரை இந்தியாவில் விற்கப்பட்ட ஸ்ப்ளென்டர்களின் எண்ணிக்கை 110 லட்சத்துக்கும் மேல். தற்போதைய உற்பத்தி ஒரு நாளைக்கு ஆறாயிரத்துக்கும் மேல். ஒரு நிமிடத்துக்கு நான்கு ஸ்ப்ளென்டர் பைக்குகள் வாங்கப்படுகின்றன. வட இந்தியாவில் ஸ்கூட்டர் என்றால் பஜாஜ் என்பது போல் பைக் என்றால் ஸ்ப்ளென்டர் மட்டுமே. ‘சாய்ச்சிரோ ஹோண்டா' என்ற எஞ்சினியர் 1969 ஆம் ஆண்டு உருவாக்கிய ஒரு 97.2 சிசி எஞ்சின் இப்படியோர் சாதனை படைத்தது எப்படி? சுருக்கமாகப் பார்ப்போம். 1980 முதல் 1990 வரையான பத்தாண்டுகள் இந்திய இருசக்கர வாகனத்துறையின் பொற்காலம். அப்போதுதான் ஜப்பான் நாட்டின் மூன்று பெரும் இருசக்கர வாகன நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் நுழைந்தன. சுஸுகி , ஹோண்டா, மற்றும் கவஸாகி. அப்போதைய ‘லைசென்ஸ் ராஜ்' இந்திய அரசின் விதிமுறைப்படி எந்த வெளிநாட்டு நிறுவனமும் நம் நாட்டில் தனியாகத் தொழில் தொடங்க இயலாது. மூன்றுமே தொழில்நுட்பக்கூட்டுறவு முறையில் இந்திய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைத்தன, கீழ்க்கண்டவாறு.. டி.வி.எஸ் + சுஸுகி,ஹீரோ + ஹோண்டா, பஜாஜ் + கவஸாகிஇவற்றைத்தவிர ஒரு அட்டகாசமான நிறுவனமும் இந்தியாவில் காலெடுத்து வைத்தது. இன்றுவரை இந்திய இளைஞர்களின் இதயத்தில் அதற்கெனத் தனியிடம் உண்டு. அந்த நிறுவனம் - யமஹா. அந்தக் கதையைப் பிறகு பார்ப்போம். அப்போது இருந்த சந்தை நிலவரம் மற்றும் எரிபொருள் விலை இவற்றுக்குத்தக்க 100 சி சி பைக்குகளை இந்த மூன்று கூட்டு நிறுவனங்களுமே சந்தையில் இறக்கின. அப்போது சந்தையில் இருந்த மூன்றே பைக்குகளுக்கு (எஸ்டி, புல்லட், ராஜ்தூத்) சரியான மாற்றாக அமைந்தன அவை. - Ind Suzuki AX 100- Hero Honda CD 100- Kawasaki Bajaj RTZஇவற்றின் குறைந்த எடை, சிறந்த பிக்-அப், சுலபமான பராமரிப்பு, நல்ல எரிபொருள் சிக்கனம் ஆகிய அம்சங்களால் மூன்று மாடல்களும் சிறப்பாக விற்கத்தொடங்கினாலும், ஹீரோ ஹோண்டா மார்கெட்டில் முந்த ஆரம்பித்தது, அப்போது நிலவிய கீழ்க்கண்ட சில காரணங்களால்.பஜாஜ் ஒரு ஸ்கூட்டர் தயாரிப்பாளராகவே சந்தையில் அடையாளம் காணப்பட்டது. 1960-70 களில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடனே வரதட்சணைக்காக ஒரு பஜாஜ் ஸ்கூட்டர் புக் செய்வார்களாம்..அப்போதுதான் அந்த ஸ்கூட்டர் அப்பெண் குழந்தையின் கல்யாணத்துக்கு டெலிவரி வந்து சேருமாம். ஆம் நண்பர்களே.. காத்திருப்புக்காலம் ஆண்டுகளாக நீண்ட காலம் அப்போது.! (எனக்கென்னமோ இந்த காத்திருப்பு எரிச்சலுக்கு உள்ளான வாடிக்கையாளர்களே பின்னர் பஜாஜை பழி வாங்கக் கிடைத்த சந்தர்ப்பமாகவே வேறு கம்பெனிகளின் புது பைக்குகளை அமோகமாக வரவேற்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது) எனவே பஜாஜின் ஸ்கூட்டர்களுக்கு இருந்த மவுசு பைக்குக்கு இல்லை. இத்தனைக்கும் அப்போதே Concealed Carburettor, Tachometer, Central Locking போன்ற அட்டகாசமான அம்சங்களைக்கொண்டிருந்தது பஜாஜின் RTZ.டிவிஎஸ், அருமையான, எளிமையான தொழில்நுட்பம் கொண்ட பைக்குகளைக் கொண்டிருந்தபோதும் அது ஒரு தென்னாட்டு நிறுவனமாகவே பார்க்கப்பட்டது.. (டிவிஎஸ் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைந்துள்ளது, சமீபத்தில்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹிமாச்சல் பிரதேஷில் ஒரு பெரும் உற்பத்திப்பிரிவு துவக்கப்பட்டது). தவிர வட இத்திய பைக் நிறுவனங்களின் அரசியல், Lobbying, மற்றும் வட இந்தியாவில் அப்போதைய குறைந்த டீலர் நெட்வொர்க் போன்ற காரணங்களால் தென்னிந்தியாவைத்தாண்டி TVS நிறுவனத்தின் பெயர் தெரியவே இல்லை, 1998 வரை. அதற்குப் பின் TVS ஒரு அருமையான காரியம் செய்தது.. ஆனால் அதற்குள் ஹீரோ ஹோண்டா என்ற ஆலமரம் இந்தியா முழுவதும் விழுதுகளை இறக்கி விட்டிருந்தது, அதுவும் வெகு ஆழமாக.! Fill it, Shut it, Forget it - நினைவிருக்கிறதா? இதுதான் ஹீரோ ஹோண்டாவின் ஆரம்ப கால விளம்பர பன்ச்! அது உண்மையும் கூட. இது வரை இந்த நிறுவனத்தின் 85% விற்பனை 100 CC பைக்குகள் மூலமாக மட்டுமே பங்களிக்கப்படுகிறது. அத்தனை 100 CC பைக்குகளுக்கும் ஒரே எஞ்சின். ஆம், முதலில் சொன்ன அதே 97.2 சிசி எஞ்சின்தான். 1997 - 1998 ஆண்டுகளில் பெட்ரோல் விலை உயரத்தொடங்கியிருந்தது. மக்கள் எரிபொருள் சிக்கனத்தின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்த தருணம். அப்போது ஹீரோ ஹோண்டா மாடல்கள் மைலேஜுக்கான மதிப்பைப் பெற்றிருந்தன. ஆனால்.. டிவிஎஸ் சுசுகி, சமுராய் போன்ற Executive Bike ஹீரோ ஹோண்டாவிடம் இல்லை. போரடிக்கும் அதே CD 100, CD 100SS போன்ற மாடல்கள். நம்பிக்கையான, ஆனால் வனில்லா ஐஸ்க்ரீம் போன்ற மாடல்கள். மக்களுக்கு பிஸ்தா, ப்ளாக் கரண்ட் என வெரைட்டி தேவைப்பட்டது.. வாங்கவும் செய்தார்கள்.ஹீரோ ஹோண்டாவின் கள ஆய்வுக்குப் பின்னர் ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளென்டர் சந்தையில் இறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வண்டி காலி என்றுதான் நினைத்தார்கள். காரணம், அது போன்ற எந்த பைக்கையுமே சந்தை அதுவரை பார்த்ததில்லை. முன் விளக்கின் மேல் பிளாஸ்டிக் கவசம்(Fairing), சீட்டின் கீழே ஒரு ABS பிளாஸ்டிக் பாகம் (Tail Cover), பராமரிப்பு சாதனங்களிப்பூட்டி வைத்துக்கொள்ள பெட்ரோல் டேங்கின் கீழே ஒரு கச்சிதமான பிளாஸ்டிக் பெட்டி. அதில் சாய்வான UTILITY BOX என்ற அடையாளம் வேறு. முதல் மூன்று மாதங்கள் பெரிதாக விற்பனை ஆகவில்லை, காரணம் விலை கொஞ்சம் அதிகம்! பிறவற்றைவிட சுமார் மூவாயிரம் ரூபாய் அதிகம். ஆனால் பின்னர் நடந்ததெல்லாம் சரித்திரம். இன்று வரை உலகின் எல்லா பைக் நிறுவனங்களும் பொறாமைப்படும் சரித்திரம் அது.!மார்க்கெட்டிங் ஷோக்கள், எக்ஸ்சேஞ்கள், ஃஜீரோ பைனான்ஸ் எல்லா முயற்சிகளும் கையாளப்பட்டன. ‘ஸ்ப்ளென்டர்' என்றால் புது யுக இளைஞனின் பைக் என்ற பிம்பம் உருவானது. மார்கெட்டிங் ஜாலம் வேலை செய்ய ஆரம்பித்தது. ஆனால் உண்மையான காரணம் வேறு.. பைக்கை வாங்கிய மக்கள் பரப்பிய வாய்வழி விளம்பரம்.! அவர்கள் பெற்ற திருப்தி.! அதுதான் விஷயம்.. ஸ்ப்ளென்டர் பெற்றிருந்த சிறப்பம்சங்கள்:புதிய ஃப்ரெஷ்ஷான ஸ்டைலிங், மிக நம்பிக்கையான எஞ்சின்,அருமையான சஸ்பென்ஷன், சீரான எரிபொருள் சிக்கனம்,மிகக்குறைந்த பராமரிப்பு செலவு,தேவையான அளவு பிக் அப்,சிறப்பான ஹேண்ட்லிங்.இதனால்தான் ஸ்ப்ளென்டர் இன்றும் விற்கிறது. அதன் பின் எத்தனையோ போட்டித் தயாரிப்புகள் களமிறக்கப்பட்டன. ஆனால் ஒன்று கூட இது வரை அந்த இடத்தைப்பிடிக்க முடியவில்லை. எளிமையான காரணம்தான். பெயர்! நம்பிக்கை!! தரம்!! அவ்வளவுதான். ஒரு கட்டத்தில் ஹீரோ ஹோண்டாவாலேயே ஸ்ப்ளென்டர் என்ற பெயரை விட முடியவில்லை. அதன் 125CC போன்ற அடுத்தடுத்த பைக் மாடல்களுக்கு ஸ்ப்ளெண்டர்+, சூப்பர் ஸ்ப்ளென்டர், ஸ்ப்ளென்டர் NXG என்றும் பெயர் வைக்குமளவு சந்தை மதிப்பு இந்தப் பெயருக்கு. ஒரு நாளைக்கு பதினாறாயிரம் பைக்குகள். இந்தியாவில் ஹீரோ ஹோண்டாவின் மார்க்கெட் ஷேர் இன்று 45%. விற்றுமுதல் 1,27,000 கோடிகளுக்கும் மேல். மூன்று பரந்து விரிந்த தொழிற்சாலைகள். நான்காவது உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. கடைசியாய் ஒரே ஒரு விஷயம்.. 2015 ஆம் ஆண்டு முதலாக ஸ்ப்ளென்டர் பைக்கில் ஹோண்டா பெயர் இருக்காது! ஹீரோ குழுமத்தின் தாதா முஞ்சால் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. உங்களோடு நானும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

Saturday, May 14, 2011

writing




ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, மீண்டும் எழுத போகிறேன். இந்த கேப்பில் என்னை விசாரித்தவர்கள் மற்றும் எழுத சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி.இம்முறை நிறைய மாற்றங்களுடன் வந்திருக்கிறேன்.என்ன, ஏதுவென்று அடுத்த பதிவில்...அதை எழுதுங்க, இதை எழுதுங்க என்று அவ்வப்போது கமெண்ட் போட்ட நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.வந்துட்டேங்க!